4.41 திருச்சோற்றுத்துறை - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

404

பொய்விரா மேனி தன்னைப்
பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன்
வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப் பட்ட
ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மைத்
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.1
405

கட்டராய் நின்று நீங்கள்
காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி
எல்லிநின் றாடு வானை
அட்டமா மலர்கள் கொண்டே
ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார்
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.2
406

கல்லினாற் புரமூன் றெய்த
கடவுளைக் காத லாலே
எல்லியும் பகலு முள்ளே
ஏகாந்த மாக ஏத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்திப்
பல்லிலந் திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார்
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.3
407

கறையராய்க் கண்ட நெற்றிக்
கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையராய் இனிய ராகித்
தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம்
பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தெ னுள்ளச்
சோர்வுகண் டருளி னாரே.

4.41.4
408

பொந்தையைப் பொருளா வெண்ணிப்
பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே ஏக மூர்த்தி
யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப்
பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந்
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.5
409

பேர்த்தினிப் பிறவா வண்ணம்
பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக் கருள்கள் செய்த
பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த
அலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார்
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.6
410

கொந்தார்பூங் குழலி னாரைக்
கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற
இறைவனை ஏத்தா தந்தோ
முந்தரா அல்கு லாளை
யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.7
411

அங்கதி ரோன வனை
அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதி ரோன் வழியே
போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை
யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குஞ்
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.8
412

ஓதியே கழிக்கின் றீர்கள்
உலகத்தீர் ஒருவன் றன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்
நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ்
சக்கரத் தானுங் காணாச்
சோதியாய்ச் சுடர தானார்
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.9
413

மற்றுநீர் மனம்வை யாதே
மறுமையைக் கழிக்க வேண்டிற்
பெற்றதோர் உபாயந் தன்னாற்
பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக்
கயிலாய மலைஎ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார்
திருச்சோற்றுத் துறைய னாரே.

4.41.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page