4.37 திருநெய்த்தானம் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

364

காலனை வீழச் செற்ற
கழலடி இரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன்
மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங்
குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வைத் தனைய கண்ட
நினைக்குமா நினைக்கின் றேனே.

4.37.1
365

காமனை யன்று கண்ணாற்
கனலெரி யாக நோக்கித்
தூபமுந் தீபங் காட்டித்
தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ்
செறிபொழிற் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம்
வாழ்வுற நினைந்த வாறே.

4.37.2
366

பிறைதரு சடையின் மேலே
பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள்
உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ
நின்றநெய்த் தான மென்று
குறைதரும் அடிய வர்க்குக்
குழகனைக் கூட லாமே.

4.37.3
367

வடிதரு மழுவொன் றேந்தி
வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே
புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ
நின்றநெய்த் தானம் மேவி
அடிதரு கழல்கள் ஆர்ப்ப
ஆடுமெம் அண்ண லாரே.

4.37.4
368

காடிட மாக நின்று
கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப்
பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலார் சீரார்
அந்தண்நெய்த் தானம் என்றுங்
கூடிய குழக னாரைக்
கூடுமா றறிகி லேனே.

4.37.5
369

வானவர் வணங்கி யேத்தி
வைகலும் மலர்கள் தூவத்
தானவர்க் கருள்கள் செய்யும்
சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத்
திகழுநெய்த் தானம் மேய
கூனிள மதியி னானைக்
கூடுமா றறிகி லேனே.

4.37.6
370

காலதிற் கழல்க ளார்ப்பக்
கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று
நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய
விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக
மகிழ்ந்தநெய்த் தான னாரே.

4.37.7
371

பந்தித்த சடையின் மேலே
பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி
அடிகள்ஐ யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று
வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
திருந்துநெய்த் தான னாரே.

4.37.8
372

சோதியாய்ச் சுடரு மானார்
சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலகம் ஏத்த
உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்த மானார்
யாவரும் இறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி
நின்றநெய்த் தான னாரே.

4.37.9
373

இலையுடைப் படைகை யேந்தும்
இலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே
தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத்
திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலும்
நின்றநெய்த் தான னாரே.

4.37.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page