4.34 திருமறைக்காடு - திரு நேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

334

தேரையு மேல்க டாவித்
திண்ணமாத் தெளிந்து நோக்கி
யாரையு மேலு ணரா
ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப்
பரந்த தோள் முடியடர்த்துக்
காரிகை அஞ்ச லென்பார்
கலிமறைக் காட னாரே.

4.33.1
335

முக்கிமுன் வெகுண்டெ டுத்த
முடியுடை அரக்கர்கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி
நாண்மதி வைத்த எந்தை
அக்கர வாமை பூண்ட
அழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகள் மோதுந்
திருமறைக் காட னாரே.

4.33.2
336

மிகப்பெருத் துலாவ மிக்கா
னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானும்
ஆண்மையால் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை
ஊன்றலும் அவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர்
நான்மறைக் காடு தானே.

4.33.3
337

அந்தரந் தேர்க டாவி
யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை
ஊன்றலும் ஒள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும்
வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்
திருமறைக் காட னாரே.

4.33.4
338

தடுக்கவுந் தாங்க வொண்ணாத்
தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக்
கையிரு பதுக ளாலும்
எடுப்பன்நான் என்ன பண்ட
மென்றெடுத் தானை ஏங்க
அடுக்கவே வல்ல னூராம்
அணிமறைக் காடு தானே.

4.33.5
339

நாண்முடிக் கின்ற சீரான்
நடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான்
கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரும்
நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார்
தொன்மறைக் காட னாரே.

4.33.6
340

பத்துவாய் இரட்டிக் கைக
ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த
பொருவலி அரக்கர் கோனைக்
கத்திவாய் கதற அன்று
கால்விர லூன்றி யிட்டார்
முத்துவாய்த் திரைகள் மோதும்
முதுமறைக் காட னாரே.

4.33.7
341

பக்கமே விட்ட கையான்
பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாம லைக்கீழ்ப்
போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு
வீரமும் இழந்த வாறே
நக்கன பூத மெல்லாம்
நான்மறைக் காட னாரே.

4.33.8
342

நாணஞ்சு கைய னாகி
நான்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன்னி ழந்த
பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தானு ணரா
நின்றெடுத் தானை அன்று
ஏணஞ்சு கைகள் செய்தார்
எழில்மறைக் காட னாரே.

4.33.9
343

கங்கைநீர் சடையுள் வைக்கக்
காண்டலும் மங்கை யூடத்
தென்கையான் தேர்க டாவிச்
சென்றெடுத் தான் மலையை
முன்கைமா நரம்பு வெட்டி
முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவாள் அருளி னானூர்
அணிமறைக் காடு தானே.

4.33.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page