4.31 திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

304

பொள்ளத்த காய மாயப்
பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்
விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி
உணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.1
305

மண்ணிடைக் குரம்பை தன்னை
மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன்
வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி
ஆடிடும் பத்தர்க் கென்றுங்
கண்ணிடை மணியர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.2
306

பொருத்திய குரம்பை தன்னுட்
பொய்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீர்
உள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை
வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.3
307

பெரும்புலர் காலை மூழ்கிப்
பித்தற்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்
கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம்
விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.4
308

தலக்கமே செய்து வாழ்ந்து
தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே
விளக்கதிற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே
காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.5
309

பழியுடை யாக்கை தன்னிற்
பாழுக்கே நீரி றைத்து
வழியிடை வாழ மாட்டேன்
மாயமுந் தெளிய கில்லேன்
அழிவுடைத் தாய வாழ்க்கை
ஐவரால் அலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.6
310

மாயத்தை அறிய மாட்டேன்
மையல்கொள் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன்
பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தால் நினைய மாட்டேன்
நீதனே நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.7
311

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா
ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளேன் என்செய் கேன்நான்
இடும்பையால் ஞான மேதுங்
கற்றிலேன் களைகண் காணேன்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.8
312

சேலின்நேர் அனைய கண்ணார்
திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய் யோடு
பலபல ஆட்டி யென்றும்
மாலினைத் தவிர நின்ற
மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.9
313

முந்துரு இருவ ரோடு
மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவர்
இருடிகள் இன்பஞ் செய்ய
வந்திரு பதுகள் தோளால்
எடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார்
கடவூர்வீ ரட்ட னாரே.

4.31.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page