4.29 திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

284

ஊனினுள் ளுயிரை வாட்டி
யுணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும்
அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னு
ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும்இன் னமுது மானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.1
285

நொய்யவர் விழுமி யாரும்
நூலினுள் நெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார்
உடலெனும் இடிஞ்சில் தன்னில்
நெய்யமர் திரியு மாகி
நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.2
286

வெள்ளியர் கரியர் செய்யர்
விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழி யூழி
யுலகம தேத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத் துள்ளார்
பஞ்சமம் பாடி யாடுந்
தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.3
287

தந்தையுந் தாயு மாகித்
தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி
முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண மென்றங்
கிமையவர் பரவி யேத்தச்
சிந்தையுட் சிவம தானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.4
288

ஆறுடைச் சடையர் போலும்
அன்பருக் கன்பர் போலுங்
கூறுடை மெய்யர் போலுங்
கோளர வரையர் போலும்
நீறுடை யழகர் போலும்
நெய்தலே கமழு நீர்மைச்
சேறுடைக் கமல வேலித்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.5
289

ஞாலமும் அறிய வேண்டின்
நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான
கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச்
செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமும் நோன்பு மாவார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.6
290

புரிகாலே நேசஞ் செய்ய
இருந்தபுண் டரீகத் தாரும்
எரிகாலே மூன்று மாகி
இமையவர் தொழநின் றாரும்
தெரிகாலே மூன்று சந்தி
தியானித்து வணங்க நின்று
திரிகாலங் கண்ட எந்தை
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.7
291

காருடைக் கொன்றை மாலை
கதிர்மதி அரவி னோடும்
நீருடைச் சடையுள் வைத்த
நீதியார் நீதி யுள்ளார்
பாரொடு விண்ணும் மண்ணும்
பதினெட்டுக் கணங்க ளேத்தச்
சீரொடு பாட லானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.8
292

ஓவாத மறைவல் லானும்
ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும்
முனிகளா னார்கள் ஏத்தும்
பூவான மூன்றும் முந்நூற்
றறுபது மாகும் எந்தை
தேவாதி தேவ ரென்றுந்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.9
293

அங்கங்க ளாறு நான்கும்
அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடுஞ்
சங்கரன் மலைஎ டுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர
அலறிட அடர்த்து நின்றுஞ்
செங்கண்வெள் ளேற தேறுந்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

4.29.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page