4.28 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

278

முன்பெலாம் இளைய காலம்
மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண இருமி நாளுங்
கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்கல் அட்டும்
பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.28.1
279

கறைப்பெருங் கண்டத் தானே
காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலைக் கண்டேன்
நீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே
பிஞ்ஞகா இவைய னைத்தும்
அறுப்பதோர் உபாயங் காணேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.28.2
280

நாதனா ரென்ன நாளும்
நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார்
இணையடி தொழுதோம் என்பார்
ஆதனா னவனென் றெள்கி
அதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும்
பழவினைப் பரிசி லேனே.

4.28.3
281

சுடலைசேர் சுண்ண மெய்யர்
சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர்
பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி
அதனிடை மணிகள் சிந்துங்
கெடிலவீ ரட்ட மேய
கிளர்சடை முடிய னாரே.

4.28.4
282

மந்திர முள்ள தாக
மறிகட லெழுநெய் யாக
இந்திரன் வேள்வித் தீயில்
எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
சிந்திர மாக நோக்கித்
தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலுஞ் சோலைக்
கானலங் கெடிலத் தாரே.

4.28.5

இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.

4.28.6-9
283

மைஞ்ஞல மனைய கண்ணாள்
பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க
விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு
காதலால் இனிது சொன்ன
கின்னரங் கேட்டு கந்தார்
கெடிலவீ ரட்ட னாரே.

4.28.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page