4.26 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

259

நம்பனே எங்கள் கோவே
நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகி
என்றென்றே பரவி நாளுஞ்
செம்பொனே பவளக் குன்றே
திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே அலந்து போனேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.1
260

பொய்யினால் மிடைந்த போர்வை
புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன்
வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன
சேவடி இரண்டுங் காண்பான்
ஐயநான் அலந்து போனேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.2
261

நீதியால் வாழ மாட்டேன்
நித்தலுந் தூயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன்
உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உன்றன்
தூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே அலந்து போனேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.3
262

தெருளுமா தெருள மாட்டேன்
தீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே அழுந்தி நாளும்
போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின்
இணையடி இரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டும்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.4
263

அஞ்சினால் இயற்றப் பட்ட
ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்
குழிதரும் ஆத னேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணங்
காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.5
264

உறுகயி றூசல் போல
ஒன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல
வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப்
பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.6
265

கழித்திலேன் காம வெந்நோய்
காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி
உணர்வெனும் இமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற
வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப் போனேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.7
266

மன்றத்துப் புன்னை போல
மரம்படு துயர மெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன்
உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து
கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான் அலமந் திட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.8
267

பிணிவிடா ஆக்கை பெற்றேன்
பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்
பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்
தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.9
268

திருவினாள் கொழுந னாருந்
திசைமுக முடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்
இணையடி காண மாட்டா
ஒருவனே எம்பி ரானே
உன்திருப் பாதங் கண்பான்
அருவனே அருள வேண்டும்
அதிகைவீ ரட்ட னாரே.

4.26.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page