4.23 கோயில் - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

229

பத்தனாய்ப் பாட மாட்டேன்
பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்
என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை
அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்த வாறே.

4.23.1
230

கருத்தனாய்ப் பாட மாட்டேன்
காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத்
திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட்
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தம்நான் காண வேண்டி
நேர்பட வந்த வாறே.

4.23.2
231

கேட்டிலேன் கிளைபி ரியேன்
கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினேன் நின்றன் பாதம்
நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு
மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள்
கூடநீ யாடு மாறே.

4.23.3
232

சிந்தையைத் திகைப்பி யாதே
செறிவுடை அடிமை செய்ய
எந்தைநீ அருளிச் செய்யாய்
யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி ஓவாத்
தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலும் ஆட
அடியிணை அலசுங் கொல்லோ.

4.23.4
233

கண்டவா திரிந்து நாளுங்
கருத்தினால் நின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக்
கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை
மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த
இறைவநீ யாடு மாறே.

4.23.5
234

பார்த்திருந் தடிய னேன்நான்
பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே என்பன் உன்னை
மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்
தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான்
கூடநான் வந்த வாறே.

4.23.6
235

பொய்யினைத் தவிர விட்டுப்
புறமலா அடிமை செய்ய
ஐயநீ அருளிச் செய்யாய்
ஆதியே ஆதி மூர்த்தி
வையகந் தன்னில் மிக்க
மல்குசிற் றம்ப லத்தே
பையநின் னாடல் காண்பான்
பரமநான் வந்த வாறே.

4.23.7
236

மனத்தினார் திகைத்து நாளும்
மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என்செய் கேனோ
கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத்
தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பான்
அடியனேன் வந்த வாறே.

4.23.8
237

நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று
அழகநீ யாடு மாறே.

4.23.9
238

மண்ணுண்ட மால வனும்
மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம்
விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க
தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும்
பரமநீ யாடு மாறே.

4.23.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page