|
218 |
செஞ்சடைக் கற்றை முற்றத்
திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக்
காணலா நறவ நாறும்
மஞ்சடைச் சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை இருள் கிழியத்
துளங்கெரி யாடு மாறே. | 4.22.1 |
219 | ஏறனார் ஏறு தம்பால்
இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி
ஆயிழை யாளோர் பாகம்
நாறுபூஞ் சோலைத் தில்லை
நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று
நீண்டெரி யாடு மாறே. | 4.22.2
|
220 | சடையனார் சாந்த நீற்றர்
தனிநிலா எறிக்குஞ் சென்னி
உடையனா ருடைத லையில்
உண்பதும் பிச்சை யேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுட்
கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று
வனலெரி யாடு மாறே. | 4.22.3
|
221 | பையர வசைத்த அல்குற்
பனிநிலா எறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும்
மாலுமோர் பாக மாகிச்
செய்யெரி தில்லை தன்னுட்
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று
கனலெரி யாடு மாறே. | 4.22.4
|
222 | ஓதினார் வேதம் வாயால்
ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பூதனார் பூதஞ் சூழப்
புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள்
நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக்
கனலெரி யாடு மாறே. | 4.22.5
|
223 | ஓருடம் பிருவ ராகி
ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப்
பயின்றஎம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட்
கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று
பிறங்கெரி யாடு மாறே. | 4.22.6
|
224 | முதற்றனிச் சடையை மூழ்க
முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
மதக்களிற் றுரிவை போர்த்த
மைந்தரைக் காண லாகும்
மதத்துவண் டறையுஞ் சோலை
மல்குசிற் றம்ப லத்தே
கதத்ததோ ரரவ மாடக்
கனலெரி யாடு மாறே. | 4.22.7
|
225 | மறையனார் மழுவொன் றேந்தி
மணிநிலா எறிக்குஞ் சென்னி
இறைவனார் எம்பி ரானார்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட்
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று
வனலெரி யாடு மாறே. | 4.22.8
|
226 | விருத்தனாய்ப் பால னாகி
விரிநிலா எறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய
நீண்டபுன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுட்
கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ
டனலெரி யாடு மாறே. | 4.22.9
|
227 | பாலனாய் விருத்த னாகிப்
பனிநிலா எறிக்குஞ் சென்னி
காலனைக் காலாற் காய்ந்த
கடவுளார் விடையொன் றேறி
ஞாலமாந் தில்லை தன்னுள்
நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தாம்
நீண்டெரி யாடு மாறே. | 4.22.10
|
228 | மதியிலா அரக்க னோடி
மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோள் நெரிய வூன்றி
நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள்
மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று
வனலெரி யாடு மாறே. | 4.22.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மூலத்தானநாயகர், சபாநாதர். தேவியார் - சிவகாமியம்மை.