4.21 திருவாரூர் திருவாதிரைத் திருப்பதிகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

208

முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.1
209

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்
கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.2
210

வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்
சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.3
211

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.4
212

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.5
213

விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.6
214

செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.7
215

முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.8
216

துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.9
217

பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்
தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

4.21.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page