4.19 திருவாரூர்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

187

சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.

4.19.1
188

பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற்
புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே.

4.19.2
189

சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.

4.19.3
190

ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே.

4.19.4
191

தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே.

4.19.5
192

எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்
செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை
அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே.

4.19.6
193

போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.

4.19.7
194

வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்
துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.

4.19.8
195

காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.

4.19.9
196

தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.

4.19.10
197

மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்
றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரியக் கண்குருதிச்
செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற்
றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.

4.19.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page