|
177 |
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. | 4.18.1 |
178 | இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே. | 4.18.2
|
179 | மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே. | 4.18.3
|
180 | நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே. | 4.18.4
|
181 | அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே. | 4.18.5
|
182 | ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. | 4.18.6
|
183 | ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே. | 4.18.7
|
184 | எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே. | 4.18.8
|
185 | ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே. | 4.18.9
|
186 | பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே. | 4.18.10
|