4.13 திருவையாறு

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

124

விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.1
125

செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.2
126

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.3
127

ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.4
128

சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.5
129

நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.6
130

கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் *அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
* அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின
எனப் பொருள்படுகின்றது.

4.13.7
131

மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.8
132

முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.9
133

கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.

4.13.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page