4.12 திருப்பழனம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

114

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.

4.12.1
115

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.

4.12.2
116

*மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.
* மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.

4.12.3
117

புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.

4.12.4
118

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ.

4.12.5
119

பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.

4.12.6
120

துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ.

4.12.7
121

*கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.

*கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில்
பொருந்திய முத்துக்கள் - அவையாவன -
யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல்,
மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள
மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு
முத்துக்களாம்.

** காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து
எனக்கொள்க. அவை - சங்கு, இப்பி, மீன், தாமரைமலர்
என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை

"சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த" எனத்
திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா,
2-வது பதிகம் 5-வது திருப்பாடலானுமுணர்க.

4.12.8
122

புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ.

4.12.9
123

வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.

4.12.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page