|
94 |
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. | 4.10.1 |
95 | ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்
கீறின வுடையினர் கெடில வாணரே. | 4.10.2
|
96 | விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே. | 4.10.3
|
97 | விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர்
கெழுமணி அரவினர் கெடில வாணரே. | 4.10.4
|
98 | குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே. | 4.10.5
|
99 | அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக்
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே. | 4.10.6
|
100 | கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே. | 4.10.7
|
101 | கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே. | 4.10.8
|
102 | வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவுங்
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே. | 4.10.9
|
103 | பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே. | 4.10.10
|