|
62 |
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.1 |
63 | தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.2
|
64 | கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.3
|
65 | அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.4
|
66 | ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.5
|
67 | தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.6
|
68 | நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.7
|
69 | விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத்
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.8
|
70 | ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.9
|
71 | அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே. | 4.7.10
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்,
தேவியார் - காமாட்சியம்மை.