4. 05 திருவாரூர்ப்பழமொழி

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

42

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து
கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.

4.5.1
43

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்
டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போன வாறே.

4.5.2
44

பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங்
குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த
கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு
பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
மறம்விலைக்குக் கொண்ட வாறே.

4.5.3
45

குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார்
நகைகாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையிற்
றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவல்
அருள்செய்யும் ஆரூ ரரைப்
பண்டெலாம் அறியாதே பனிநீராற்
பரவைசெயப் பாவித் தேனே.

4.5.4
46

துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்
சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற்
றிடவுண்ட ஏழை யேன்நான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து
பொருட்படுத்த ஆரூ ரரை
என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்
காதனாய் அகப்பட் டேனே.

4.5.5
47

பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு
தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின்
உள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போதும் அடியவர்கட்
காரமுதாம் ஆரூ ரரை
எப்போது நினையாதே இருட்டறையின்
மலடுகறந் தெய்த்த வாறே.

4.5.6
48

கதியொன்றும் அறியாதே கண்ணழலத்
தலைபறித்துக் கையில் உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண
நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த ஆருரில் வார்தேனை
வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க
மின்மினித்தீக் காய்ந்த வாறே.

4.5.7
49

பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற
சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோ டிக்
கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை
யாட்கொண்ட ஆரூ ரரைப்
பாவியேன் அறியாதே பாழூரிற்
பயிக்கம்புக் கெய்த்த வாறே.

4.5.8
50

ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்
ஓரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங்
கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை
ஆர்வச்செற் றக்கு ரோதந்
தட்டானைச் சாராதே தவமிருக்க
அவஞ்செய்து தருக்கி னேனே.

4.5.9
51

மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து
முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானை எழில்முளரித் தவிசின்மிசை
இருத்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை
ஆலாலம் உண்டு கண்டங்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க
இரும்புகடித் தெய்த்த வாறே.

4.5.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page