திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமறைக்காடு தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை பிற்சேர்க்கை 3வது திருப்பதிகம்)

3. திருமறைக்காடு

பண் - கொல்லி

(பின்னர் கிடைக்கப்பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்)

திருச்சிற்றம்பலம்

23

விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ
கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காட மர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளி னாலே.

3.1
24.

முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காட மர்ந்தாய்
அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லே
அடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே.

3.2
25.

கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவை
பங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காட மர்ந்தாய்
அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே.

3.3
26.

இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்
தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்
மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்
கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.

3.4
27.

பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காட மர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.

3.5
28.

செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ
டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய்
அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த
அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே.

3.6
29.

மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
கதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காட மர்ந்தாய்
விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந் தன்மை
இதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே.

3.7
30.

நீசனாம் அரக்கன் றிண்டோ ள் நெரிதர விரலால் ஊன்றுந்
தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காட மர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவ மெய்யே
ஈசனார்க் காள தானான் என்பதை அறிவித் தாயே.

3.8
31.

மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
எய்துமா றறிய மாட்டார் எழில்மறைக் காட மர்ந்தாய்
பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச் சேரச்
செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே.

3.9
32.

மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்
கண்டனை யகள என்றும் கலிமறைக் காட மர்ந்தாய்
தண்டியைத் தானா வைத்தான், என்னுமத் தன்மை யாலே
எண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித் தன்றே.

3.10
33.

மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக்
கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன்
தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
பதமுடைப் பத்தும் வல்லார்
பரமனுக் கடியர் தாமே.

3.11

திருச்சிற்றம்பலம்

மூன்றாம் திருமுறை முற்றும்.

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் மூன்று திருமுறையும் முற்றுப்பெற்றது.


Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page