திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த பிற்சேர்க்கை தலமான
திருவிடைவாய் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை - பிற்சேர்க்கை 1வது திருப்பதிகம்)

1. திருவிடைவாய்

(இப்பதிகம் 1917-இல் திருவிடைவாய்க் கல்வெட்டினின்று எடுக்கப்பட்டது.)

திருச்சிற்றம்பலம்

1

மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.

1.1
2.

ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.

1.2
3.

கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்
திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்
குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே.

1.3
4.

கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்
வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே.

1.4
5.

திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்
கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.

1.5
6.

கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.

1.6
7.

பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.

1.7
8.

எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.

1.8
9.

புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே.

1.9
10.

உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே.

1.10
11.

ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.

1.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page