திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்குருகாவூர் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 124வது திருப்பதிகம்)

3.124 திருக்குருகாவூர் - வெள்ளடை

பண் - அந்தாளிக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்	
தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார்	
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய	
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.		     3.124.1

திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து	
வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு	
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய	
அரை மல்கு வாளர வாட்டுகந் தீரே.	       3.124.2

அடையலர் தொல்நகர் மூன்றெரித் தன்ன	
நடைமட மங்கையோர் பாகம் நயந்து	
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய	
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.		      3.124.3
	
வளங்கிளர் கங்கை மடவர லோடு	
களம்பட ஆடுதிர் காடரங் காக	
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய	
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே. 	    3.124.4

சுரிகுழல் நல்ல துடியிடை யோடு	
பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க	
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய	
எரிமழு வாட்படை எந்தை பிரானே.	       3.124.5

காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்	
தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்	
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய	
ஆவினில் ஐந்துகொண் டாட்டுகந் தீரே. 	     3.124.6

	   - திருச்சிற்றம்பலம் -

 • இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.
 • Back to Complete Third thirumuRai Index

  Back to ThirumuRai Main Page
  Back to thamizh shaivite literature Page
  Back to Shaiva Sidhdhantha Home Page
  Back to Home Page