|
1311 |
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.1 |
1312. | சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானார் இமையவ ரேத்த இனிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி அழலுமிழ் புகையின் ஆகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்தும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.2
|
1313. | பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.3
|
1314. | புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் பிரானவன் உறைவிடம் வினவிற்
கற்றநால் வேதம் அங்கமோ ராறுங் கருத்தினார் அருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.4
|
1315. | நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுரர் ஆசற வாழி யளித்தவன் உறைவிடம் வினவிற்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.5
|
1316. | மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியுமா றங்கம் ஐவேள்வி
இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணருங்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.6
|
| இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 3.122.7
|
1317. | தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி தானுடை அரக்க னொண்கயிலை
அலைவது செய்த அவன்றிறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென வோங்கும் மாளிகை நிலவும் மாமதில் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.8
|
1318. | கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவர் உமையவ ளோடும் உகந்தினி துறைவிடம் வினவிற்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனி பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.9
|
1319. | தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவரம் உடுக்குங்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே. | 3.122.10
|
1320. | விளைதரு வயலுள் வெயில்செறி பவளம் மேதிகள் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுள் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்கள் அமரலோ கத்திருப் பாரே. | 3.122.11
|