திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவேகம்பம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 114வது திருப்பதிகம்)

3.114 திருவேகம்பம் - திருஇயமகம்

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

1224

பாயுமால்விடை மேலொரு பாகனே பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொருள் நுண்பொரு ளாதியே ஆலநீழல் அரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.

3.114.1
1225.

சடையணிந்ததும் வெண்டலை மாலையே தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூத கணங்களே போற்றிசைப்பன பூத கணங்களே
கடைகடோ றும் இரப்பது மிச்சையே கம்பமேவி யிருப்பது மிச்சையே.

3.114.2
1226.

வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே யானமாசுண மூசுவ தாகமே
புள்ளியாடை யுடுப்பது கத்துமே போனவூழி யுடுப்பது கத்துமே
கள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

3.114.3
1227.

முற்றலாமை யணிந்த முதல்வரே மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

3.114.4
1228.

வேடனாகி விசையற் கருளியே வேலைநஞ்ச மிசையற் கருளியே
ஆடுபாம்பரை யார்த்த துடையதே யஞ்சுபூதமு மார்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி யழகிதே குற்றமின்மதிக் கண்ணி யழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே கம்பமாபதி யாவது மும்மதே.

3.114.5
1229.

இரும்புகைக்கொடி தங்கழல் கையதே இமயமாமகள் தங்கழல் கையதே
அரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே ஆழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகல்நட மாடுதல் செய்துமே பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

3.114.6
1230.

முதிரமங்கை தவஞ்செய்த காலமே முன்புமங்கை தவஞ்செய்த காலமே
வெதிர்களோடகில் சந்த முருட்டியே வேழமோடகில் சந்த முருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே ஆன்நெய்ஆடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

3.114.7
1231.

பண்டரக்க னெடுத்த பலத்தையே பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே யுடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.

3.114.8
1232.

தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே சித்தமோடு கீழூழி திரிந்துமே
காணநின்றனர் உற்றது கம்பமே கடவுள்நீயிடம் உற்றது கம்பமே.

3.114.9
1233.

ஓருடம்பினை யீருரு வாகவே யுன்பொருட்டிற மீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே ஆற்றலெய்தற் கரிது பெரிதுமே
தேரரும்மறி யாது திகைப்பரே சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.

3.114.10
1234.

கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்து விரும்பிப் புகலியே பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே அண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின்னியல் பாடிய பத்துமே பாடவல்லவ ராயின பத்துமே.

3.114.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர், தேவியார் -காமாட்சியம்மை.


திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page