திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பல்லவனீச்சரம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 112வது திருப்பதிகம்)

3.112 திருப்பல்லவனீச்சரம் - ஈரடி

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

பரசுபாணியர் பாடல்விணையர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார்.	3.112.1
	
பட்டநெற்றியர் நட்டமாடுவர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
திட்ட மாயிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.2
	
பவளமேனியர் திகழும் நீற்றினர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
தழகரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.3
	
பண்ணில்யாழினர் பயிலும்மொந்தையர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
தண்ணலா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.4
	
பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
தெல்லி யாட்டுகந்தார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.5
	
பச்சைமேனியர் பிச்சை கொள்பவர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
திச்சையா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.6
	
	
பைங்கண் ஏற்றினர் திங்கள்சூடுவர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
தெங்குமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.7
	
பாதங் கைதொழ வேதமோதுவர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
தாதியா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.8
	
படிகொள்மேனியர் கடிகொள் கொன்றையர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
தடிகளா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.9
	
பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்	
  பட்டினத்துறை பல்லவனீச்சரத்	
திறைவரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 	3.112.10
	
வானமாள்வதற் கூனமொன்றிலை மாதர்	
  பல்லவனீச் சரத்தானை	
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்லவல்லவர் நல்லரே.	3.112.11

	   - திருச்சிற்றம்பலம் -

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page