திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவீழிமிழலை தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 111வது திருப்பதிகம்)

3.111 திருவீழிமிழலை ஈரடி

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

1190

வேலி னேர்தரு கண்ணி னாளுமை
பங்க னங்கணன் மிழலை மாநகர்
ஆல நீழலின் மேவி னானடிக்
கன்பர் துன்பிலரே.

3.111.1
1191.

விளங்கு நான்மறை வல்ல வேதியர்
மல்கு சீர்வளர் மிழலை யானடி
உளங்கொள் வார்தமை உளங்கொள் வார்வினை
ஒல்லை யாசறுமே.

3.111.2
1192.

விசையி னோடெழு பசையு நஞ்சினை
யசைவு செய்தவன் மிழலை மாநகர்
இசையு மீசனை நசையின் மேவினான்
மிசை செயாவினையே.

3.111.3
1193.

வென்றி சேர்கொடி மூடு மாமதில்
மிழலை மாநகர் மேவி நாடொறும்
நின்ற ஆதிதன் அடிநி னைப்பவர்
துன்ப மொன்றிலரே.

3.111.4
1194.

போத கந்தனை யுரிசெய் தோன்புயல்
நேர்வ ரும்பொழில் மிழலை மாநகர்
ஆத ரஞ்செய்த அடிகள் பாதம
லாலோர் பற்றிலமே.

3.111.5
1195.

தக்கன் வேள்வியைச் சாடி னார்மணி
தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்க னாரடி தொழுவர் மேல்வினை
நாடொ றுங்கெடுமே.

3.111.6
1196.

போர ணாவுமுப் புரமெ ரித்தவன்
பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர்ச்
சேரு மீசனைச் சிந்தை செய்பவர்
தீவி னைகெடுமே.

3.111.7
1197.

இரக்க மிற்றொழில் அரக்க னாருடல்
நெருக்கி னான்மிகு மிழலை யானடி
சிரக்கொள் பூவென ஒருக்கி னார்புகழ்
பரக்கும் நீள்புவியே.

3.111.8
1198.

துன்று பூமகன் பன்றி யானவன்
ஒன்று மோர்கிலா மிழலை யானடி
சென்று பூம்புனல் நின்று தூவினார்
நன்று சேர்பவரே.

3.111.9
1199.

புத்தர் கைச்சமண் பித்தர் பொய்க்குவை
வைத்த வித்தகன் மிழலை மாநகர்
சித்தம் வைத்தவர் இத்த லத்தினுள்
மெய்த்த வத்தவரே.

3.111.10
1200.

சந்த மார்பொழில் மிழலை யீசனைச்
சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில்
பந்த மார்தமிழ் பத்தும் வல்லவர்
பத்த ராகுவரே.

3.111.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page