|
1178 |
வரம தேகொளா உரம தேசெயும்
புரமெ ரித்தவன் பிரம நற்புரத்
தரன்நன் நாமமே பரவு வார்கள்சீர்
விரவு நீள்புவியே. | 3.110.1 |
1179. | சேணு லாமதில் வேணு மண்ணுளோர்
காண மன்றலார் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணு கின்றவ
ராணி யொத்தவரே. | 3.110.2
|
1180. | அகல மார்தரைப் புகலும் நான்மறைக்
கிகலி யோர்கள்வாழ் புகலி மாநகர்ப்
பகல்செய் வோனெதிர்ச் சகல சேகரன்
அகில நாயகனே. | 3.110.3
|
1181. | துங்க மாகரி பங்க மாவடுஞ்
செங்கை யானிகழ் வெங்கு ருத்திகழ்
அங்க ணானடி தங்கை யாற்றொழத்
தங்கு மோவினையே. | 3.110.4
|
1182. | காணி யொண்பொருட் கற்ற வர்க்கீகை
யுடைமை யோரவர் காதல் செய்யுநற்
றோணி வண்புரத் தாணி யென்பவர்
தூமதி யினரே. | 3.110.5
|
1183. | ஏந்த ராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப்
பூந்த ணோதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்த ராய்தொழும் மாந்தர் மேனிமேற்
சேர்ந்தி ராவினையே. | 3.110.6
|
1184. | சுரபு ரத்தினைத் துயர்செய் தாருகன்
துஞ்ச வெஞ்சினக் காளி யைத்தருஞ்
சிரபு ரத்துளா னென்ன வல்லவர்
சித்தி பெற்றவரே. | 3.110.7
|
1185. | உறவு மாகியற் றவர்க ளுக்குமா
நெதிகொ டுத்துநீள் புவியி லங்குசீர்ப்
புறவ மாநகர்க் கிறைவ னேயெனத்
தெறகி லாவினையே. | 3.110.8
|
1186. | பண்பு சேரிலங் கைக்கு நாதன்நன்
முடிகள் பத்தையுங் கெடநெ ரித்தவன்
சண்பை யாதியைத் தொழும வர்களைச்
சாதியா வினையே. | 3.110.9
|
1187. | ஆழி யங்கையிற் கொண்ட மாலயன்
அறிவொ ணாததோர் வடிவு கொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே
கற்றல் நற்றவமே. | 3.110.10
|
1188. | விச்சை யொன்றிலாச் சமணர் சாக்கியப்
பிச்சர் தங்களைக் கரிச றுத்தவன்
கொச்சை மாநகர்க் கன்பு செய்பவர்
குணங்கள் கூறுமினே. | 3.110.11
|
1189. | கழும லத்தினுட் கடவுள் பாதமே
கருது ஞானசம் பந்த னின்றமிழ்
முழுதும் வல்லவர்க் கின்ப மேதரும்
முக்கண் எம்மிறையே. | 3.110.12
|