திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
கூடச்சதுக்கம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 109வது திருப்பதிகம்)

3.109 திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும்


திருமயேந்திரமும் - திருஆரூரும் - கூடச்சதுக்கம்

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

1167

மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.

3.109.1
1168.

வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தண்ஆ ரூராதி யானைக்காவே.

3.109.2
1169.

மாலயன் தேடிய மயேந்திரருங்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலைஆ ரூராதி யானைக்காவே.

3.109.3
1170.

கருடனை யேறரி அயனார்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரருங்
கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன்ஆ ரூராதி யானைக்காவே.

3.109.4
1171.

மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரருங்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன்ஆ ரூராதி யானைக்காவே.

3.109.5
1172.

சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருந்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் ஆனைக்காவே.

3.109.6
1173.

கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.

3.109.7
1174.

கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத் தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடை யாரூராதி யானைக்காவே.

3.109.8
1175.

ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
காதிலோர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே.

3.109.9
1176.

அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.

3.109.10
1177.

ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன தமிழ்சொல்லுமே.

3.109.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page