|
1145 |
கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லான் உமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த அம்மான் அடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந் தானிடம் நாரையூர்தானே. | 3.107.1 |
1146. | விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்
றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே. | 3.107.2
|
1147. | தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையான் இழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமுஞ் சேரநின்ற திருநாரை யூரானைப்
பாடுமின் நீர்பழி போகும்வண்ணம் பயிலும் உயர்வாமே. | 3.107.3
|
1148. | வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்
பெண்ணில மர்ந்தொரு கூறதாய பெருமான் அருளார்ந்த
அண்ணல்மன் னியுறை கோயிலாகும் அணிநாரை யூர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே. | 3.107.4
|
1149. | வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான் திருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே. | 3.107.5
|
1150. | கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே. | 3.107.6
|
1151. | ஊழியும் இன்பமுங் காலமாகி உயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே. | 3.107.7
|
1152. | கூசமி லாதரக் கன்வரையைக் குலுங்க எடுத்தான்றோள்
நாசம தாகி இறஅடர்த்த விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோன் இடம்போலுந்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே. | 3.107.8
|
1153. | பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
ஆமள வுந்திரிந் தேத்திக்காண்டல் அறிதற் கரியானூர்
பாமரு வுங்குணத் தோர்கள்ஈண்டிப் பலவும் பணிசெய்யுந்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே. | 3.107.9
|
1154. | வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
உற்றரை யோர்கள் உரைக்குஞ்சொல்லை உணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் தொழிலாரப்
பெற்றர வாட்டி வரும்பெருமான் திருநாரை யூர்சேர்வே. | 3.107.10
|
1155. | பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேற்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கும் அவலக் கடல்தானே. | 3.107.11
|