|
1101 |
கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத்
துடியிடை யாளையோர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே. | 3.103.1 |
1102. | கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகை
தேய்த்தன் றனங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக்
காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும்
வாய்த்தமுத் தீத்தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே. | 3.103.2
|
1103. | நொய்யதோர் மான்மறி கைவிரலின் நுனைமேல் நிலையாக்கி
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி விரிபுன் சடைதாழ
மையிருஞ் சோலை மணங்கமழ இருந்தா ரிடம்போலும்
வைகலும் மாமுழ வம்மதிரும் வலம்புர நன்னகரே. | 3.103.3
|
1104. | ஊனம ராக்கை யுடம்புதன்னை யுணரின் பொருளன்று
தேனமர் கொன்றையி னானடிக்கே சிறுகாலை யேத்துமினோ
ஆனமர் ஐந்துங்கொண் டாட்டுகந்த அடிகள் இடம்போலும்
வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே. | 3.103.4
|
1105. | செற்றெறி யுந்திரை யார்கலுழிச் செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறி யாதன லாடுநட்ட மணியார் தடங்கண்ணி
பெற்றறி வார்எரு தேறவல்ல பெருமான் இடம்போலும்
வற்றறி யாப்புனல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே. | 3.103.5
|
1106. | உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு வுமையோ டுடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே. | 3.103.6
|
1107. | புரிதரு புன்சடை பொன்றயங்கப் புரிநூல் புரண்டிலங்க
விரைதரு வேழத்தின் ஈருரிதோல் மேல்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூந்துகில் ஆரணங்கை யமர்ந்தா ரிடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே. | 3.103.7
|
1108. | தண்டணை தோளிரு பத்தினொடுந் தலைபத் துடையானை
ஒண்டணை மாதுமை தான்நடுங்க ஒருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க் கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே. | 3.103.8
|
1109. | தாருறு தாமரை மேலயனுந் தரணி யளந்தானுந்
தேர்வறி யாவகை யால்இகலித் திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வறி யாவகை யால்நிமிர்ந்த பெருமான் இடம்போலும்
வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே. | 3.103.9
|
1110. | காவிய நற்றுவ ராடையினார் கடுநோன்பு மேற்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந்தொண்டர் உள்ளுருக
ஆவியுள் நின்றருள் செய்யவல்ல அழகர் இடம்போலும்
வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே. | 3.103.10
|
1111. | நல்லியல் நான்மறை யோர்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான் வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வாரே. | 3.103.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கணம்மை.