திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருநாரையூர் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 102வது திருப்பதிகம்)

3.102 திருநாரையூர்

பண் - பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

1090

காம்பினை வென்றமென் தோளிபாகங் கலந்தான் நலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவின் திருநாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்சடையான் புலியின் னுரிதோன்மேற்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.

3.102.1
1091.

தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம்
ஆவினில் ஐந்துங்கொண் டாட்டுகந்தான் அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவோமே.

3.102.2
1092.

மாயவன் சேயவன் வெள்ளியவன் விடஞ்சேரும் மைமிடற்றன்
ஆயவ னாகியோர் அந்தரமும் மவனென்று வரையாகந்
தீயவன் நீரவன் பூமியவன் திருநாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர்மேல் வினையாயின வீடுமே.

3.102.3
1093.

துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்
அஞ்சுட ராரெரி யாடுவர்ஆர் அழலார் விழிக்கண்ணி
னஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர் நலனோங்கு நாரையூர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படுவார்க் கினியில்லை யேதமே.

3.102.4
1094.

பொங்கிளங் கொன்றையி னார்கடலில் விடமுண் டிமையோர்கள்
தங்களை ஆரிடர் தீரநின்ற தலைவர் சடைமேலோர்
திங்களை வைத்தனல் ஆடலினார் திருநாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீ றணியவல்லார் அவரே விழுமியரே.

3.102.5
1095.

பாருறு வாய்மையி னார்பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்
தாருறு மார்புடை யான்மலையின் தலைவன் மலைமகளைச்
சீருறு மாமறு கிற்சிறைவண் டறையுந் திருநாரை
யூருறை யெம்மிறை வர்க்கிவை யொன்றொடொன் றொவ்வாவே.

3.102.6
1096.

கள்ளி இடுதலை யேந்துகையர் கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடைதன்மேன் மிளிரா டரவார்த்து
நள்ளிருள் நட்டம தாடுவர்நன் னலன்ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்திலெம் மேல்வருவல் வினையாயின வோடுமே.

3.102.7
1097.

நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர்
தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற்
சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே.

3.102.8
1098.

ஊனுடை வெண்டலை கொண்டுழல்வான் ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண்மதி வைத்துகந்தான் வரிவண்டி யாழ்முரலத்
தேனுடை மாமலர் அன்னம்வைகுந் திருநாரை யூர்மேய
ஆனிடை யைந்துகந் தானடியே பரவா அடைவோமே.

3.102.9
1099.

தூசு புனைதுவ ராடைமேவுந் தொழிலா ருடம்பினிலுள்
மாசு புனைந்துடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை யூர்தன்னில்
பூசு பொடித்தலை வர்அடியார் அடியே பொருத்தமே.

3.102.10
1100.

தண்மதி தாழ்பொழில் சூழ்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யான்உறையுந் திருநாரை யூர்தன்மேற்
பண்மதி யாற்சொன்ன பாடல்பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர் வானோர் எதிர்கொளவே.

3.102.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சௌந்தரேசர், தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page