திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஇராமேச்சுரம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 101வது திருப்பதிகம்)

3.101 திருஇராமேச்சுரம்

பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

1079

திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக் கவெரி யேந்தியாடும் நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்தம் இலங்குகானல் இராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.

3.101.1
1080.

பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரும் இராமேச் சுரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.

3.101.2
1081.

அலைவளர் தண்புனல் வார்சடைமேல் அடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடஆடி மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியும் இராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.

3.101.3
1082.

மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்
தேதெரி அங்கையில் ஏந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.

3.101.4
1083.

சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடஆடுங் குணமே குறித்துணர்வார்
ஏலந றும்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.

3.1015
1084.

கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளொடாடும் இயல்பின ராகிநல்ல
இணைமலர் மேலனம் வைகுகானல் இராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.

3.101.6
1085.

நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.

3.101.7
1086.

பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாக
மின்றிகழ் சோதியர் பாடலாடல் மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவியேத்தும் இராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோள் அடர்த்தார் கொளுங்கொள்கையே.

3.101.8
1087.

கோவலன் நான்முகன் நோக்கொணாத குழகன் அழகாய
மேவலன் ஒள்ளெரி ஏந்தியாடும் இமையோர் இறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.

3.101.9
1088.

பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலும் இராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.

3.101.10
1089.

தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும் இராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தன்நல்ல மொழியான் நவின்றேத்தும்
பாவியன் மாலைவல் லாரவர்தம் வினையாயின பற்றறுமே.

3.101.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் -இராமநாதேசுவரர், தேவியார் - பர்வதவர்த்தனி.
இது மலைவளர்காதலியென்று தமிழிற்சொல்லப்படும்.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page