திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருத்தோணிபுரம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 100வது திருப்பதிகம்)

3.100 திருத்தோணிபுரம்

பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

1072

கரும்பமர் வில்லியைக் காய்ந்துகாதற் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த அற்புதஞ் செப்பரிதாற்
பெரும்பக லேவந்தென் பெண்மைகொண்டு பேர்ந்தவர் சேர்ந்தஇடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.

3.100.1
1073.

கொங்கியல் பூங்குழற் கொவ்வைச்செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனியெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோரவந்தென் சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்தசெம்மைத் தோணி புரந்தானே.

3.100.2
1074.

மத்தக் களிற்றுரி போர்க்கக்கண்டு மாதுமை பேதுறலுஞ்
சித்தந் தெளியநின் றாடியேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங்கொண்ட ஒருவர்க் கிடம்போலுந்
துத்தநல் லின்னிசை வண்டுபாடுந் தோணி புரந்தானே.

3.100.3

இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள்மறைந்துபோயின.

3.100.4-7
1075.

வள்ள லிருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன் றெடுத்தோன் உரம்நெரிய
மெள்ள விரல்வைத்தென் உள்ளங்கொண்டார் மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின் மேல்மிதந்த தோணி புரந்தானே.

3.100.8
1076.

வெல்பற வைக்கொடி மாலும்மற்றை விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்பணிந்துஞ்
செல்வற நீண்டெஞ் சிந்தைகொண்ட செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்குசெம்மைத் தோணி புரந்தானே.

3.100.9
1077.

குண்டிகை பீலிதட் டோ டுநின்று கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தென் எழில்கவர்ந் தாரிடமாந்
தொண்டிசை பாடல றாததொன்மைத் தோணி புரந்தானே.

3.100.10
1078.

தூமரு மாளிகை மாடம்நீடு தோணிபுரத் திறையை
மாமறை நான்கினொ டங்கமாறும் வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம் பந்தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும்வல்லார் பார்முழு தாள்பவரே.

3.100.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page