திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமுதுகுன்றம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 99வது திருப்பதிகம்)

3.99 திருமுதுகுன்றம் - திருமுக்கால்

பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய	
பரசமர் படையுடை யீரே	
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்	
அரசர்கள் உலகில்ஆ வாரே.	3.99.1
	
மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய	
பையர வம்மசைத் தீரே	
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்	
நைவிலர் நாடொறும் நலமே.	3.99.2
	
முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய	
மழவிடை யதுவுடை யீரே	
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்	
பழியொடு பகையிலர் தாமே.	3.99.3
	
முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய	
உருவமர் சடைமுடி யீரே	
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்	
திருவொடு தேசினர் தாமே.	3.33.4
	
முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய	
பத்து முடியடர்த் தீரே	
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்	
சித்தநல் லவ்வடி யாரே.	3.33.8
	
முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்	
றியன்றவ ரறிவரி யீரே	
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்	
பயன்றலை நிற்பவர் தாமே.	3.33.9
	
மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய	
கட்டமண் தேரைக்காய்ந் தீரே	
கட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்	
சிட்டர்கள் சீர்பெறு வாரே.	3.33.10
	
மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை	
நாடிய ஞானசம் பந்தன்	
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்	
பாடிய அவர்பழி யிலரே.	3.33.11

	- திருச்சிற்றம்பலம் -
	
  • இப்பதிகத்தில்5,6,7-ம்செய்யுட்கள்மறைந்து போயின.
  • Back to Complete Third thirumuRai Index

    Back to ThirumuRai Main Page
    Back to thamizh shaivite literature Page
    Back to Shaiva Sidhdhantha Home Page
    Back to Home Page