|
1031 |
நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ்
சொல்வணம் இடுவது சொல்லே. | 3.96.1 |
1032. | நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே. | 3.96.2
|
1033. | நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே. | 3.96.3
|
1034. | நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே. | 3.96.4
|
1035. | நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு
பாடுளம் உடையவர் பண்பே. | 3.96.5
|
1036. | நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே. | 3.96.6
|
1037. | நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்மடிக் கீழே. | 3.96.7
|
1038. | நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீரே
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே. | 3.96.8
|
1039. | நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
றிருவரை யிடர்கள்செய் தீரே
இருவரை இடர்கள்செய் தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே. | 3.96.9
|
1040. | நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண்கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே. | 3.96.10
|
1041. | நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே. | 3.96.11
|
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணையப்பர், தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.