|
1020 |
எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே. | 3.95.1 |
1021. | யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே. | 3.95.2
|
1022. | இளமதி நுதலியோ டின்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே. | 3.95.3
|
1023. | இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழல்தொழும்
அடியவர் அருவினை யிலரே. | 3.95.4
|
1024. | இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீருமை உள்குவார்
அமைகில ராகிலர் அன்பே. | 3.95.5
|
1025. | எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே
தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடை யோரே. | 3.95.6
|
1026. | எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே. | 3.95.7
|
1027. | ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே. | 3.95.8
|
1028. | இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
அயனுமால் அறிவரி யீரே
அயனுமால் அறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே. | 3.95.9
|
1029. | ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவ
ராழ்துயர் அருவினை யிலரே. | 3.95.10
|
1030. | ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே. | 3.95.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர், தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.