திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஅம்பர்மாகாளம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 93வது திருப்பதிகம்)

3.93 திருஅம்பர்மாகாளம்

பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

999

படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

3.93.1
1000.

கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

3.93.2
1001.

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

3.93.3
1002.

நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
ஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

3.93.4
1003.

புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

3.93.5
1004.

பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்
அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

3.93.6
1005.

சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

3.93.7
1006.

பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே.

3.93.8
1007.

வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்
எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்
அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

3.93.9
1008.

சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே.

3.93.10
1009.

செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக்
*கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.

3.93.11

*

கம்பினார் நெடுமதில் என்பது ஆகாயம் பின்னிடும்படி மேலோங்கிய மதிலெனப்
பொருள்படுகின்றது. கம் என்பது ஆகாயம்.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page