திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருநெல்வேலி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 92வது திருப்பதிகம்)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

3.92 திருநெல்வேலி

பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

988

மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.1
989.

என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
துன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.2
990.

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.3
991.

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.4
992.

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனின்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.5
993.

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.6
994.

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.7
995.

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.8
996.

பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.9
997.

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அண்ணலார்தாங்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

3.92.10
998.

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே.

3.92.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page