|
978 |
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே. | 3.91.1 |
979. | மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே. | 3.91.2
|
980. | முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேற்
சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே. | 3.91.3
|
981. | கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே. | 3.91.4
|
982. | கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே. | 3.91.5
|
983. | கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே. | 3.91.6
|
| இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 3.91.7
|
984. | நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே. | 3.91.8
|
985. | பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தனங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண் டோ ங்கிய அடிகளாரே. | 3.91.9
|
986. | கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே. | 3.91.10
|
987. | தாழிளங் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்
கோழையா அழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே. | 3.91.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர், தேவியார் - சடைமுடியம்மை.