|
967 |
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற்
தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.1 |
968. | தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைமல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.2
|
969. | மழைவளர் இளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேற்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்குல் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.3
|
970. | கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
விரும்பிடந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.4
|
971. | வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவுங்
களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாந்
துளங்குநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.5
|
972. | பொறியுலாம் அடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையோ டொருபகல் அமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.6
|
973. | புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
திரிதரும் இயல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையோ டொருபகல் அமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.7
|
974. | நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்இந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினைக் கீழ்ப்படுத்தார்
பூண்டநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.8
|
975. | கரைகடல் அரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனுங்
குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.9
|
976. | அயமுக வெயினிலை அமணருங் குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங் கண்ணியோ டொருபகல் அமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே. | 3.90.10
|
977. | விண்ணுலாம் விரிபொழில் விரைமணல் துருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோ டுறைபதியை
நண்ணுலாம் புகலியுள் அருமறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே. | 3.90.11
|