திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவீழிமிழலை தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 85வது திருப்பதிகம்)

3.85 திருவீழிமிழலை - திருவிராகம்

பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

912

மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்
பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே

3.85.1
913.

எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி யிளமுலைப்
பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதோர் விடையினர் கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.

3.85.2
914.

மைத்தகு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
வைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்
தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே.

3.85.3
915.

செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதரு
கவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை யழிதர முதுமதில்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.

3.85.4
916.

பைங்கண தொருபெரு மழலைவெ ளேறினர் பலியெனா
எங்கணு முழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ ஆரமா
வெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.

3.85.5
917.

பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதோர் அரவினர் பதிவிழி மிழலையே.

3.85.6
918.

அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண்
டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

3.85.7
919.

பாதமோர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமோ டடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
ஓதமோ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமோ டுறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே.

3.85.8
920.

நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதுயில்
நாரண னெனஇவர் இருவரும் நறுமல ரடிமுடி
ஓருணர் வினர்செல லுறலரு முருவினோ டொளிதிகழ்
வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.

3.85.9
921.

இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்
மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

3.85.10
922.

உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவருறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெறுவரே.

3.85.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page