|
901 |
பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே. | 3.84.1 |
902. | கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமுமோர் அரவமு மலரரை மிசையினிற்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே. | 3.84.2
|
903. | கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொரு
பங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்
தங்கிய கரதல முடையவர் விடையவர் உறைபதி
பொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே. | 3.84.3
|
904. | மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியை
மேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்
சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவரு
போதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே. | 3.84.4
|
905. | காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே. | 3.84.5
|
906. | சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னைய நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதி
புன்னையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே. | 3.84.6
|
907. | வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரு முருவினர் இமையவர் தொழுவதோ ரியல்பினர்
புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே. | 3.84.7
|
908. | வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்
நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே. | 3.84.8
|
909. | தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்
போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே. | 3.84.9
|
910. | கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே. | 3.84.10
|
911. | போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே. | 3.84.11
|