திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருத்தோணிபுரம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 81வது திருப்பதிகம்)

3.81 திருத்தோணிபுரம் - திருவிராகம்

பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

868

சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி
அங்கமுடல் மேலுறவ ணிந்துபிணி தீரஅருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே.

3.81.1
869.

சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.

3.81.2
870.

வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலின் நஞ்சமமு துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.

3.81.3
871.

கொல்லைவிடை யேறுடைய கோவணவன் நாவணவு மாலை
ஒல்லையுடை யான்அடைய லார்அரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே.

3.81.4
872.

தேயுமதி யஞ்சடை யிலங்கிட விலங்கன்மலி கானிற்
காயுமடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன் நினைப்பார்
தாயெனநி றைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே.

3.81.5
873.

பற்றலர்தம் முப்புரம் எரித்தடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம தொழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்
பற்றவன் இசைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்
துற்றசடை அத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே.

3.81.6
874.

பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசும்அடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தலுடை யானூர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே.

3.81.7
875.

தென்றிசை யிலங்கையரை யன்திசைகள் வீரம்விளை வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தக னிடஞ்சீர்
ஒன்றிசை யியற்கிளவி பாடமயி லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுர மாமே.

3.81.8
876.

நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி
ஆற்றலத னால்மிக வளப்பரிய வண்ணம்எரி யாகி
ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே.

3.81.9
877.

மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டும்அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழி கெடுத்தடை வினானக்
காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற்
தோடுகுழை பெய்தவர் தமக்குறைவு தோணிபுர மாமே.

3.81.10
878.

துஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
மஞ்சனை வணங்குதிரு ஞானசம் பந்தனசொன் மாலை
தஞ்சமென நின்றிசை மொழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்றுவளர் வாரே.

3.81.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page