|
835 |
நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே. | 3.78.1 |
836. | சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே. | 3.78.2
|
837. | போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே. | 3.78.3
|
838. | காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே. | 3.78.4
|
839. | சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே. | 3.78.5
|
840. | செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே. | 3.78.6
|
841. | உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே. | 3.78.7
|
842. | உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே. | 3.78.8
|
843. | பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே. | 3.78.9
|
844. | வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே. | 3.78.10
|
845. | கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே. | 3.78.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.