திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமாணிகுழி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 77வது திருப்பதிகம்)

3.77 திருமாணிகுழி - திருவிராகம்

பண் - சாதாரி

திருச்சிற்றம்பலம்

824

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.

3.77.1
825.

சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி பேசும்அர னார்மகிழ்விடந்
தாதுமலி தாமரைம ணங்கமழ வண்டுமுரல் தண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகில் நீடுதவி மாணிகுழியே.

3.77.2
826.

அம்பனைய கண்ணுமை மடந்தையவள் அஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தஅர னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடியழகார்
உம்பரவர் கோன்நகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.

3.77.3
827.

நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவுஞ்
சித்தமதொ ருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாங்
கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநடம் ஆடலதுகண்
டொத்தவரி வண்டுகளு லாவியிசை பாடுதவி மாணிகுழியே.

3.77.4
828.

மாசில்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னியழகார்
ஊசல்மிசை யேறியினி தாகஇசை பாடுதவி மாணிகுழியே.

3.77.5
829.

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாஞ்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.

3.77.6
830.

எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி செய்யஇறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சதனை உண்டுலகம் உய்யஅருள் உத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது உண்டுநிறை பைம்பொழிலின்வாய்
ஒண்பலவின் இன்கனி சொரிந்துமணம் நாறுதவி மாணிகுழியே.

3.77.7
831.

எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய அரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரும் மென்மொழியி னார்பணைமு லைப்பவள வாயழகதார்
ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.

3.77.8
832.

நேடும்அய னோடுதிரு மாலும்உண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தமித ழிச்சடையெம் ஈசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவின்
ஊடுலவு புன்னைவிரி தாதுமலி சேருதவி மாணிகுழியே.

3.77.9
833.

மொட்டையமண் ஆதர்முது தேரர்மதி யில்லிகள் முயன்றனபடும்
முட்டைகள் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தஅதரில்
ஒட்டமலி பூகம்நிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.

3.77.10
834.

உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியஎம் மானையடி சேருமணி காழிநகரான்
சந்தம்நிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கள்நெடு வானநிலனே.

3.77.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கமேனியீசுவரர், தேவியார் - மாணிக்கவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page