|
737 |
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந்
தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற்
கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே. | 3.69.1 |
738. | முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள் சிதறஎழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல நிலவுகா ளத்திமலையே. | 3.69.2
|
739. | வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாருகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி *பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.
( * பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.) | 3.69.3
|
740. | வேயனைய தோளுமையோர் பாகமது வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே. | 3.69.4
|
741. | மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி யிழியவயல் நிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே. | 3.69.5
|
742. | பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றஅரன் மலையைவினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்தவிறகிற்
காரகில் இரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே. | 3.69.6
|
743. | ஆருமெதி ராதவலி யாகியச லந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன் இருந்தமலை தன்னைவினவில்
ஊரும்அர வம்மொளிகொள் மாமணியு மிழ்ந்தவையு லாவிவரலாற்
காரிருள் கடிந்துகன கம்மெனவி ளங்குகா ளத்திமலையே. | 3.69.7
|
744. | எரியனைய சுரிமயிர் இராவணனை யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடுவரை யூடுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும் வெருவுகா ளத்திமலையே. | 3.69.8
|
745. | இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென இகலுமிருவர்
தனதுருவம் அறிவரிய சகலசிவன் மேவுமலை தன்னைவினவிற்
புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரும ணம்புணரும்நாள்
கனகமென மலர்களணி வேங்கைகள் நிலாவுகா ளத்திமலையே. | 3.69.9
|
746. | நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவிற்
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே. | 3.69.10
|
747. | காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைகள் நீடுவளர் கொச்சைவயம் மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்கள் நல்லர்பர லோகமெளிதே. | 3.69.11
|