|
714 |
சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே. | 3.67.1 |
715. | தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர் பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே. | 3.67.2
|
716. | பகலொளிசெய் நகமணியை முகைமலரைநிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை மிகஅருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிக ழலர்பெருகு புகலிநகரே. | 3.67.3
|
717. | அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர வங்களெழில் தங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிகர் எங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே. | 3.67.4
|
718. | ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே. | 3.67.5
|
719. | நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே. | 3.67.6
|
720. | அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே. | 3.67.7
|
721. | அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே. | 3.67.8
|
722. | விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே. | 3.67.9
|
723. | பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே. | 3.67.10
|
724. | நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே. | 3.67.11
|
725. | ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே. | 3.67.12
|