திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பனந்தாள் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 62வது திருப்பதிகம்)

3. 062 திருப்பனந்தாள்

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

660

கண்பொலி நெற்றியினான் திகழ்கையிலோர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

01
661.

விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயலேழுலகில் லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறைபேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

02
662.

உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமோர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்கமாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

03
663.

சூழ்தரு வல்வினையும் முடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல்பொங்கர வும்புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

04
664.

விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன்எம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரைபன்மணியுங் கொணருந்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

05
665.

விடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெருக் கும்மணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

06
666.

மலையவன் முன்பயந்த மடமாதையோர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

07
667.

செற்றரக் கன்வலியைத் திருமெல்விரலால் அடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
புற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமுந்
தற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

08
668.

வின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

09
669.

ஆதர் சமணரொடும் மடையைந்துகில் போர்த்துழலும்
நீதர் உரைக்குமொழி யவைகொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ்புள்ளிரி யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.

10
670.

தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையான் அவன்றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகுஞானசம் பந்தன்நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர்தம்வினை பற்றறுமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சடையப்பஈசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page