திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவக்கரை தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 60வது திருப்பதிகம்)

3. 060 திருவக்கரை

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

638

கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் தன்றலையிற் பலிகொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.

01
639.

பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியோர் பாகமதா
ஏய்ந்தவன் எண்ணிறந்தவ் விமையோர்கள் தொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே.

02
640.

சந்திர சேகரனே யருளாயென்று தண்விசும்பில்
இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத்தானிடம் வக்கரையே.

03
641.

நெய்யணி சூலமோடு நிறைவெண்மழு வும்மரவுங்
கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்
மையணி மாமிடற்றான் உறையும்மிடம் வக்கரையே.

04
642.

ஏனவெண் கொம்பினோடும் இளவாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்ல
மானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.

05
643.

கார்மலி கொன்றையோடுங் கதிர்மத்தமும் வாளரவும்
நீர்மலி யுஞ்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும்வக்கரை மேவியவன்
பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.

06
644.

கானண வும்மறிமான் ஒருகையதோர் கைமழுவாள்
தேனண வுங்குழலாள் உமைசேர்திரு மேனியினான்
வானண வும்பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்
ஊனண வுந்தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே.

07
645.

இலங்கையர் மன்னனாகி எழில்பெற்றஇ ராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள்போற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.

08
646.

காமனை யீடழித்திட் டவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கென் றருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் டாமரைமேல் அயனுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகையானிடம் வக்கரையே.

09
647.

மூடிய சீவரத்தர் முதிர்பிண்டிய ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ்சப்படுந் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக்கென்றுபல் வீதிதோறும்
வாடிய வெண்டலைகொண் டுழல்வானிடம் வக்கரையே.

10
648.

தண்புன லும்மரவுஞ் சடைமேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்னுறை வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர்தம்வினை பற்றறுமே.

11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சந்திரசேகரேசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page