திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 52வது திருப்பதிகம்)

3.052 திருஆலவாய் - திருவிராகம்

இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

பண் - கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

550

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.

01
551.

பட்டிசைந்த அல்குலாள் பாவையாளோர் பாகமா
ஒட்டிசைந்த தன்றியும் உச்சியா ளொருத்தியாக்
கொட்டிசைந்த ஆடலாய் கூடல்ஆல வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.

02
552.

குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய்
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்பம் என்றிவை
முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.

03
553.

முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல்
அதிரவீசி யாடுவாய் அழகன்நீ புயங்கன்நீ
மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.

04
554.

கோலமாய நீள்மதிற் கூடல்ஆல வாயிலாய்
பாலனாய தொண்டுசெய்து பண்டுமின்றும் உன்னையே
நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலுஞ்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.

05
555.

பொன்தயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை
பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய்
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.

06
556.

ஆதியந்த மாயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதியந்த மாயினாய் சோதியுள்ளோர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையால் கிளர்தருக்கி னார்க்கல்லால்
ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே.

07
557.

கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடற்
துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

08
558.

தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறுங்
கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலும்நின்
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.

09
559.

தேற்றமில் வினைத்தொழில் தேரருஞ் சமணரும்
போற்றிசைத்து நின்கழற் புகழ்ந்துபுண்ணி யங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.

10
560.

போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண் டாலவாயில் அண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page