திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருத்தண்டலைநீள்நெறி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 50வது திருப்பதிகம்)

3. 050 திருத்தண்டலைநீணெறி

பண் - கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

531

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.

01
532.

இகழுங் காலன் இதயத்தும் என்னுளுந்
திகழுஞ் சேவடி யான்திருந் தும்மிடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.

02
533.

பரந்த நீலப் படரெரி வல்விடங்
கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்
சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.

03
534.

தவந்த என்புந் தவளப் பொடியுமே
உவந்த மேனியி னானுறை யும்மிடஞ்
சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.

04

இப்பதிகத்தில் 5, 6, 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

05-07
535.

இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடஞ்
சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.

08
536.

கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.

09
537.

கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ்
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே.

10
538.

நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீணெறிநாதேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page