திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமழபாடி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 48வது திருப்பதிகம்)

3. 048 திருமழபாடி

பண் - கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

509

அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழு வார்தக வாளரே.

01
510.

விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாம்மழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.

02
511.

முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமின் நுந்துய ரானவை தீரவே.

03
512.

கலையி னான்மறை யான்கதி யாகிய
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

04
513.

நல்வி னைப்பயன் நான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தன் உருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே.

05
514.

நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
ஆடி னானெரி கானிடை மாநடம்
பாடி னாரிசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே.

06
515.

மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
மன்னி னானுறை மாமழ பாடியைப்
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின வோயுமே.

07
516.

தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
தன்னி லங்க அடர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னி லங்க வுறுபிணி யில்லையே.

08
517.

திருவின் நாயக னுஞ்செழுந் தாமரை
மருவி னானுந் தொழத்தழல் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.

09
518.

நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.

10
519.

மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
எந்தை சந்தம் இனிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற் காழியுள் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page